பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம்? உளவு தகவல் வெளியீடு
பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.;
பாட்னா,
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர் என அந்த மாநிலத்தின் காவல் தலைமையகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்க உறுப்பினர்களான ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட் பகுதியை சேர்ந்த அடில் உசைன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை அடையாளம் கண்டுள்ளது.
அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வரைபட விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனைத்து மாவட்ட காவல் தலைமைக்கும் பகிர்ந்து உள்ளது. இதுபற்றி வெளியான தகவலில், அவர்கள் 3 பேரும் நேபாள நாட்டின் வழியே பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பூர்னியா, கதிஹார், அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் என நேபாளம் மற்றும் வங்காளதேச நாடுகளுடன் எல்லையை பகிர கூடிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரும் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் காத்மண்டு நகருக்கு வந்து பின்னர், கடந்த வாரம் அராரியா வழியே பீகாருக்குள் நுழைந்துள்ளனர்.
பீகாரில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்திற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 20 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும்.
1,300 கி.மீ. தொலைவை கடந்து செல்லும் இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெறும். இந்த சூழலில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் ஊடுருவல் பற்றிய உளவு தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.