விமான விபத்து: முன்னாள் முதல்-மந்திரியின் அதிர்ஷ்ட எண் '1206' - இறுதி பயண தேதியாக மாறிய சோகம்

விஜய் ரூபானி தனக்கு சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்து வைத்திருந்தார்.;

Update:2025-06-13 14:59 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம், சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி(வயது 68) பயணம் செய்த நிலையில், அவரும் விபத்தில் பலியானார். அவர் லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து விஜய் ரூபானியின் மனைவி அஞ்சலிபென், இன்று காலை குஜராத் வந்தடைந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை குஜராத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்த விஜய் ரூபானி, அமைதியான நடத்தை உடையராகவும், உறுதியான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்பவராகவும் அறியப்பட்டார். கொரோனா காலகட்டத்தில் மாநில அரசின் நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்தினார்.

இதற்கிடையில், விஜய் ரூபானி '1206' என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதினார். அவருக்கு சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில், 12.06.2025 என்ற தேதியில் நடந்த விமான விபத்து, விஜய் ரூபானியின் இறுதி பயணத்திற்கான தேதியாக மாறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வரலாற்றில் மிகவும் மோசமான விமான விபத்தாக இது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்