3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று முதல் சுற்றுப்பயணம்
கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். அவர் பயணத்தின் முதல் நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார்.
மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு, சைப்ரஸ். அந்த நாட்டு அதிபரான நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று சைப்ரஸ் செல்கிறார். நாளை (திங்கட்கிழமை) வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
குறிப்பாக தலைநகர் நிகோசியாவில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் லிமாசோல் நகரில் நடைபெறும் வர்த்தக மன்றத்திலும் சிறப்புரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் ஈடுபாட்டை வலுப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் பயனுள்ளதாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கனடா
சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை கனடா புறப்படுகிறார். 17-ந் தேதி வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
கனடா பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு முக்கியமான சர்வதேச பிரச்சினைகள் குறித்து உரையாற்றுகிறார். குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு-ஆற்றல் தொடர்பு, குவாண்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் பேசுகிறார்.
இந்த மாநாட்டுக்கு இடையே ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்தி இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி தொடர்ந்து 6-வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக பிரதமர் மோடி குரேஷியா பயணம்
பின்னர் கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 18-ந் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளன்கோவிச் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
குறிப்பாக அதிபர் ஜோரன் மிலனோவிச், பிரதமர் ஆண்ட்ரெஜ் மற்றும் பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசுகிறார்.
இந்திய பிரதமர் ஒருவர் குரேஷியா செல்வது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.