ஹாசன் மாரடைப்பு உயிரிழப்பில் அரசியல்: பா.ஜனதாவுக்கு சித்தராமையா கண்டனம்
கடந்த ஒரு மாதத்தில் ஹாசன் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.;
பெங்களூரு,
முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகத்தில் இளம் வயது உடையவர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன, கொரோனா தடுப்பூசி காரணமா என்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த பிப்ரவரி மாதமே மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டோம். இது தொடர்பாக இதய நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் ஹாசன் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய நாங்கள் ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு 10 நாட்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சிறு வயதிலேயே இளைஞர்கள் உயிரிழப்பது என்பது எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விஷயத்தில் கூட பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இதை நான் கண்டிக்கிறேன். மக்களை பாதுகாக்க எங்கள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.