மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும்நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு கை விலங்கிடப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடத்தல் முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட சம்பவம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது பதிலுரையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.