சக குடிமகனின் உரிமைகளை பாதுகாப்பது ஒரு பகிரப்பட்ட கடமையாகும்: திரவுபதி முர்மு பேச்சு
நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன மற்றும் கொண்டாடப்படுகின்றன என்று முர்மு கூறினார்.;
புதுடெல்லி,
டெல்லியில் மனித உரிமைகள் தினம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடத்தப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் (ஓய்வு) மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் பி. கே. மிஸ்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முர்மு, மனித உரிமைகளானது அரசுகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம், சமூக அமைப்புகள் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகளின் தனிப்பட்ட பொறுப்பு அல்ல என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்.
நம்முடைய சக குடிமகனின் உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பது என்பது ஒரு பகிரப்பட்ட கடமையாகும். இந்த கடமையானது நம் எல்லோரிடத்திலும் உள்ளது என கூறினார்.
ஒவ்வொரு தனி நபரும் சுதந்திரத்துடன், மதிப்பு, சமத்துவம் ஆகியவற்றுடன் வாழ முடியும் என்றதொரு நாட்டை கட்டியெழுப்பும் ஈடுபாட்டுடன் நாம் இருக்கிறோம். இந்த நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அதனுடன் அவை கொண்டாடப்படுகின்றன என்றும் கூறினார்.