நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி ஆலோசனை செய்ய முடியாது: அமித்ஷா பேச்சு
வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ்.ஐ.ஆரின் பணியாகும் என்று அவர் கூறினார்.;
புதுடெல்லி,
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின்போது இன்று விளக்கமளித்து பேசினார். அவர் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, விவாதத்தில் இருந்து ஒருபோதும் விலகவில்லை என்றார்.
தொடர்ந்து அவர், தேர்தல் ஆணையத்தின் வசம் உள்ள இந்த எஸ்.ஐ.ஆர். பணியை பற்றி தற்போது பேச முடியாது என நம்புகிறேன் என்றார். எஸ்.ஐ.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. ஏனெனில், அது அரசியல் சாசனத்தின்படி அவசியம் ஆகும். அரசியல் சாசனத்தின் பிரிவு 326-ன் கீழ் தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு வெளிப்படையான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான நடைமுறை அது என்றார். இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதே எஸ்.ஐ.ஆரின் பணியாகும். வெளிநாட்டினரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. அதற்காகவே எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளப்படுகிறது என கூறினார். இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்கு பதிவில் ஈடுபட வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், நாட்டில் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி ஆலோசனை செய்ய முடியாது என அப்போது அமித்ஷா கூறினார். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பேச முடியும். அது அரசின் பார்வைக்குள் வரும். அதனால், உடனடியாக இந்த ஆலோசனையை அரசு ஏற்று கொண்டது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டால், யார் அதற்கு பதிலளிப்பார்கள்? என்றார்.
வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ்.ஐ.ஆரின் பணியாகும் என்று அவர் கூறினார். நாட்டு மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் வருத்தப்படுகின்றன. அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை எஸ்.ஐ.ஆர். நீக்கும் என்றும் கூறினார்.