மாணவியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்... திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்...அடுத்து நடந்த சம்பவம்
செல்போனில் அவர் வேறொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவை காட்டி அதுபற்றி கேட்டேன் என காதலன் கூறினார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒரு இளம்பெண் பிணம் கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுக தொடங்கியிருந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கிடந்தது.
மேலும் அவரது உடலில் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. முக்கியமாக தலையில் பின்புறத்தில் ஆழமான காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதை தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் முண்டக்காமட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சித்ரப் பிரியா(வயது 19) என்பது தெரியவந்தது. முண்டக்காமட்டம் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு. இவரது மனைவி ஷைனி. இவர்களது மகள்தான் சித்ரபிரியா. ஷைஜு வனத்துறையில் தற்காலிக தீயணைப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஷைனி கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
சித்ர பிரியா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி படித்துவந்த மாணவி சித்ரபிரியா, விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து சென்றபடி இருந்திருக்கிறார். அதேபோல் கடந்த 6-ந்தேதி அவர் ஊருக்கு வந்தார். அன்று இரவு அவர், தனது வீட்டின் அருகே அய்யப்ப சேவா சங்கம் சார்பில் நடந்த தேசவிளக்கு விழாவில் தாய் ஷைனியுடன் கலந்து கொண்டார்.
பின்பு இரவு 11 மணிக்கு ஷைனி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மாணவி சித்ரபிரியா வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஷைனி, தனது மகள் குறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாருக்கும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. மறுநாளும் மாணவியை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். மேலும் நண்பர்களிடம் விசாரித்தனர். ஆனால் மாணவியை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் மாணவியை அவரது உறவினர்கள் மட்டுமின்றி, அவருடைய தாயுடன் பணிபுரியக்கூடிய ஊழியர்களும் தொடர்ந்து தேடியபடி இருந்தனர்.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ரப்பிரியா உடல் கிடந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரனை நடத்தியதில் சித்ரப் பிரியா கொலையில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.
சித்ரபிரியா ஒரு வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது சித்ரபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் அவரது காதலன் ஆலன்(21) என்று தெரியவந்தது.சித்ரபிரியா காணாமல் போவதற்கு முன்பு இருவரும் தொலைபேசியில் பலமுறை பேசி உள்ளனர். சித்ரபிரியாவின் செல்போனை ஆய்வு செய்ததில் இது தெரியவந்தது.
சி.சி.டி.வி. பதிவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.53 மணி வரையிலான காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. சித்ரப் பிரியா ஆலனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்களுடன் மற்றொரு பைக்கில் 2 பேர் பின் தொடர்ந்து சென்றனர்.இந்த காட்சிகள் அடிப்படையில் ஆலனை விசாரணைக்காக அழைத்தனர். ஆரம்பத்தில், சிதர்பிரியாவை ஒரு பைக்கில் அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும், அவர் இறந்ததுபற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர்.
எனினும் ஆலன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து ஆலனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் 'சித்ரப்பிரியாவை ஆலன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.ஆலனை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆலன் குடிபோதையில் கல்லால் தாக்கி சித்ரபிரியாவை கொன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆலன் அளித்துள்ள வாக்கு மூலத்தில், சித்ரபிரியாவை நைசாக பேசி ஆசைவார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். சித்ரபிரியாவுக்கு வாலிபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டேன். செல்போனில் அவர் வேறொரு வாலிபருடன் இருப்பது போன்ற போட்டோவை காட்டி அதுபற்றி கேட்டேன். அதனால் சித்ரபிரியா என்னிடம் வாக்குவாதம் செய்தாள். மதுபோதையில் இருந்த நான் ஆத்திரத்தில் அவளை கல்லால் சரமாறியாக தாக்கினேன். இதனால் அவள் இறந்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கொலை நடந்த இடத்திலிருந்து ரத்தக் கறை படிந்த கல்லையும் போலீசார் மீட்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் பலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி காதலன் கொலை செய்த சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.