ஜெர்மனிக்கு 15-ந்தேதி பயணம்: ராகுல்காந்தி வெளிநாட்டு நாயகன் - பாஜக விமர்சனம்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார். வெளிநாடு வாழ் இந்த யர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது. உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின் போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற் கொள்வதை பா.ஜனதா விமர்சித்துள்ளது.
இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது ஆனால், ராகுல் காந்தி வருகிற 15-ந்தேதி முதல் 20 -ந்தேதி வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் ஒரு நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்- சுற்றுலாத் தலைவர். பீகார் தேர்தலின் போதும் அவர் வெளிநாட்டிலும், பின்னர் வனச்சவாரியும் மேற்கொண்டார் என அதில் பதிவிட்டுள்ளார்.