காசா அமைதி திட்டத்திற்கு இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை
இரு தலைவர்களும், பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொண்டனர்.;
புதுடெல்லி,
காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபடுகின்றனர் என கூறி அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி வழியே இன்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய உறவை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி இருவரும் ஆலோசித்தனர். மேற்காசியாவின் சூழல் பற்றிய பார்வைகளை பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், காசா அமைதி திட்டத்தினை விரைந்து அமல்படுத்துவது உள்ளிட்ட அந்த பகுதியில் நீடித்த அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார் என தெரிவித்து உள்ளது.
இரு தலைவர்களும், பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொண்டதுடன், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் பூஜ்ய சகிப்பு தன்மையை கொண்டிருக்கிறோம் என மீண்டும் வலியுறுத்தினர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என ஒப்பு கொண்டனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.