குஜராத்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - ஜவுளி பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை.;

Update:2025-12-10 19:45 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 3-வது தளம், 5-வது தளம் மற்றும் மேல் தளத்தில் தீயின் தாக்கம் கடுமையாக இருந்தது.

சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தின் லிப்ட் வயரிங்கில் ஏற்பட்ட சிறிய தீயால் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தால் வணிக வளாகத்தில் இயங்கி வந்த 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் அந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஜவுளி பொருட்கள், சிந்தெட்டிக் துணிகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்