பஞ்சாப்: எல்லை தாண்டி டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்
பஞ்சாப்பில் எல்லை தாண்டி கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்;
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிகளுக்குள் டிரோன் மூலம் போதைப்பொருளை கடத்துவதற்கான முயற்சிகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து 30 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருளை டிரோன் மூலம் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கடத்தியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இது குறித்து கரிண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் கடத்திய குற்றவாளியை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.