'ராகுல் காந்தி ஊழல் பற்றி பேசுவது, திருடன் காவலாளி வேடம் அணிவது போன்றது' - பா.ஜ.க. விமர்சனம்
அசாமில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்று பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.;
புதுடெல்லி,
ஊழல் குற்றச்சாட்டில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சிறையில் அடைக்கப்படுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசுவது, திருடன் காவலாளி வேடம் அணிவது போன்றது என்று பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஜாபர் இஸ்லாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"ராகுல் காந்தி தன்னை ஒரு ராஜாவாக கருதுகிறார். ஆனால் மக்கள் அவரை 3 முறை நிராகரித்து விட்டனர். ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசுவது, திருடன் காவலாளி வேடம் அணிவது போன்றது. ஹிமாந்தா பிஸ்வா சர்மா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவரது நல்லாட்சிக்கு மாநில வாக்காளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ராகுல் காந்தியின் தாராள மனப்பான்மையால் அவர் வெற்றி பெறவில்லை.
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) பற்றி ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது அசாமில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு கிடைத்து வரும் தோல்விகளுக்கு புதிய சாக்குப்போக்குகளை ராகுல் காந்தி தேடுகிறார்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.