கர்நாடகத்தில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை

முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கர்நாடக கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.;

Update:2025-08-10 01:52 IST

பெங்களூரு,

மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை வகுத்தது. இதை முந்தைய பா.ஜனதா அரசு ஏற்று அமல்படுத்தியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காங்கிரஸ் அரசு, தேசிய கல்வி கொள்கையை கைவிடுவதாக அறிவித்தது. மாநிலத்திற்கு சொந்தமாக கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கர்நாடக கல்வி கொள்கை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் தற்போது மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது கன்னடம், ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. இதை கைவிட்டு இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம் கற்பிக்கும் முறை) பின்பற்ற வேண்டும் என்றும், 5-ம் வகுப்பு வரை தொடக்க கல்வியை கன்னட மொழியில் வழங்க வேண்டும், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை கன்னடத்தை விருப்ப மொழியாக பயில அனுமதிக்க வேண்டும்.

இருமொழி கொள்கை என்றால் தாய்மொழி அதாவது கன்னடம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும். இதை அமல்படுத்த ஆசிரியர்களுக்கு இரு மொழி புலமை குறித்து பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும். பள்ளி கல்வியில் 2, 8, 4 என்ற முறையை பின்பற்ற வேண்டும்.

அதாவது 2 ஆண்டுகள் என்பது மழலை வகுப்புகள், 8 ஆண்டுகள் தொடக்க கல்வி, 4 ஆண்டுகள் பள்ளி கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள தொடக்க பள்ளிகளில் 2 ஆண்டுகள் மழலை வகுப்புகளை தொடங்க வேண்டும். தனியார் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-ம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கைக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மொத்தம் 2 ஆயிரத்து 197 பக்கங்களை கொண்டது ஆகும். கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள், இந்தியை உள்ளடக்கியுள்ள மும்மொழி கொள்கையை கைவிட்டு விட்டு இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்