குடியரசு தினம்; பஞ்சாப்பில் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை

ரெயில் நிலையத்தின் காத்திருப்பு அறைகள், உள்ளே நுழையும், வெளியே செல்லும் பகுதிகளிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.;

Update:2026-01-25 23:10 IST

அமிர்தசரஸ்,

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் இந்தியா வந்தடைந்தனர்.

அவர்கள் இருவருக்கும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர்களை மத்திய இணை மந்திரி ஜிதின் பிரசாத வரவேற்றார். இந்நிலையில், டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ரெயில் நிலையங்களில் அரசு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கூட்டாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்கு உயரிய முன்னுரிமை கொடுத்து, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதன்படி, பயணிகளின் உடமைகள் பரிசோதனை செய்யப்படுவதுடன், ரெயில் நிலையத்தின் காத்திருப்பு அறைகள், உள்ளே நுழையும், வெளியே செல்லும் பகுதிகளிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ரெயில் நிலையத்தின் எல்லா பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதுடன், மோப்ப நாய் குழுவினரும் விரிவான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்