லண்டன் வீடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்
லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது;
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 2 நில பேர வழக்குகள் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், 3-வதாக லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்க வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதாவது வதேராவின் அறிவுறுத்தல் பேரில் இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத தரகரான சஞ்சய் பண்டாரி அந்த வீட்டை வாங்கி, பராமரிப்பு பணிகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்பேரில் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று மனைவி பிரியங்காவுடன் நேரில் வந்து வதேரா ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர்.
முன்னதாக லண்டனில் தனக்கு எந்த வீடும் இல்லை எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் வதேரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்ததிலிருந்தே, வதேரா மீது ஊழல் மற்றும் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பா.ஜ.க. குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.