மும்பையில் பாலியல் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை - ஆட்டோ டிரைவர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மலாட் பகுதியில், கடந்த 25-ந்தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேச்சு மூச்சின்றி சாலையோரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த ஏற்கனவே உயிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், உயிரிழந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்ணுடன் கடைசியாக ஆட்டோ டிரைவர் ஒருவர் உடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தன.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில், அந்த நபரின் பெயர் சந்திரபால் ராம்கிலாடி(வயது 34) என்பதும், அவர் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சந்திரபாலை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பாலியல் தொழிலாளியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.