மராட்டியத்தில் அதிர்ச்சி: மத்திய மந்திரியின் மகளிடம் பாலியல் சீண்டல்; ஒருவர் கைது

மராட்டியத்தில் மத்திய மந்திரியின் மகளிடம் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.;

Update:2025-03-02 20:02 IST

புனே,

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை இணை மந்திரியாக இருப்பவர் ரக்சா கட்சே. இந்நிலையில், மராட்டியத்தின் ஜல்காவன் மாவட்டத்தில் முக்திநகர் பகுதியில் திருவிழா ஒன்று நடந்துள்ளது.

இதில், பெண் மந்திரியின் மகளும் கலந்து கொண்டார். அப்போது, இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து மந்திரி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால், கூட்டணி ஆதரவுடன் பா.ஜ.க. ஆளும் மகாயுதி அரசுக்கு எதிராக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

3 முறை பா.ஜ.க. எம்.பி.யான ரக்சா, அவருடைய மகளுக்கு எதிரான சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மந்திரி ரக்சா கட்சே கூறும்போது, திருவிழாவில் பங்கேற்க மகள் அனுமதி கேட்டபோது, கூடவே பாதுகாவலர் ஒருவரையும் மற்றும் 3 ஊழியர்களையும் உடன் அழைத்து செல்லும்படி கூறினேன்.

இதன்பின்பு, மகள் மற்றும் தோழிகளை திருவிழாவில் சிலர் பின்தொடர்ந்து சென்று, அவர்களை தள்ளி விட்டு, புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துள்ளனர். எங்களுடைய ஊழியர் தடுத்தபோது, அந்த இளைஞர்கள் அடாவடித்தனத்துடன் நடந்து கொண்டனர்.

பாதுகாப்பு இருக்கும்போதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்றால் மற்றவர்களின் நிலை என்னவாக இருக்கும்? என நினைத்து பாருங்கள் என வேதனையுடன் கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மீதமுள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் சிலர் வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்