"மராத்தி தெரியாவிட்டால் வெளியே போ' மின்சார ரெயிலில் பெண் பயணிகளுக்கு இடையே சண்டை
சண்டை போட்ட பெண்களை அடையாளம் காண முடியாததால் ரெயில்வே போலீசார் ரெயிலில் இருந்து இறங்கி சென்று விட்டனர்.;
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து கப்போலி நோக்கி நேற்று இரவு 8 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பெண்கள் பெட்டியில் இருக்கை தொடர்பாக 2 பெண் பயணிகளிடையே சண்டை ஏற்பட்டது. இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் அவர்களின் சண்டையை தீர்க்க முயன்றார்.
ஆனால் முடியாமல் போனதால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதற்கிடையில் வாய் தகராறில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர் மராத்தி கற்று கொள் இல்லையெனில் மும்பையை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்து உள்ளார். இந்த இருக்கைகள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மொழிப்பிரச்சினையாக மாறியதால் அங்கிருந்த பெண் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ரெயில் முல்லுண்ட் ரெயில் நிலையம் வந்து நின்ற போது அங்கு தயார் நிலையில் இருந்த ரெயில்வே போலீசார் மகளிர் பெட்டியில் புகுந்து சண்டையில் ஈடுபட்ட பெண்கள் யார் என தேடினர். ஆனால் சண்டை போட்ட பெண்களை அடையாளம் காண முடியாததால் ரெயில்வே போலீசார் ரெயிலில் இருந்து இறங்கி சென்று விட்டனர். இதற்கிடையில் ரெயிலில் ஏற்பட்ட பெண்களின் சண்டை அடங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து வீடியோவை போலீசார் ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரித்து வருகின்றனர்.