ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு

அரசியல் மோதல்களுக்கு இந்த கோர்ட்டை பயன்படுத்தாதீர்கள் என்று கோர்ட்டு தெரிவித்தது.;

Update:2025-09-09 03:16 IST

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ரேவந்த் ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ஒழித்து விடுவார்கள் என்று பேசியதாக, ஐதராபாத் கோர்ட்டில் அவருக்கு எதிராக தெலுங்கானா மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின்கீழ் ரேவந்த் ரெட்டி குற்றம் இழைத்ததற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக தெரிவித்தது. அதை எதிர்த்து தெலுங்கானா ஐகோர்ட்டில் ரேவந்த் ரெட்டி மனு தாக்கல் செய்தார். அரசியல் பேச்சுகளை அவதூறாக கருத முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த மாதம் 1-ந் தேதி, ஐகோர்ட்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தெலுங்கானா பா.ஜனதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது.பா.ஜனதா மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:- நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அரசியல் மோதல்களுக்கு இந்த கோர்ட்டை பயன்படுத்தாதீர்கள் என்று திரும்பத்திரும்ப சொல்லி வருகிறோம். நீங்கள் அரசியல்வாதி என்றால், உங்களுக்கு முரட்டுத்தோல் இருக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்