கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு நோட்டீஸ்
2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளுக்கு வழங்க வேண்டிய 342.69 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.;
புதுடெல்லி,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கௌரவம் பார்க்காமல் இணையதள பக்கத்தை திறக்க வேண்டும் என தமிழக அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் ஒதுக்க வேண்டும். ஆனால், மாநில அரசுக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
இந்தாண்டுக்கான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும், மத்திய அரசும் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளுக்கு வழங்க வேண்டிய 342.69 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காதது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.