பெண் ஐ.பி.எஸ். அதிகாரி-கணவர் இடையேயான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது.;
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த வழக்கில் அவருடைய கணவர் மற்றும் மாமனார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் தனக்கு நீதிகேட்டு ஐ.பி.எஸ். அதிகாரியின் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரித்தது.
கணவன்-மனைவிக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் சட்டப்போராட்டத்துக்கு முடிவு கட்டும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 142-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கும், அவருடைய கணவருக்கும் விவாகரத்து வழங்கினர்.மேலும் இது தொடர்பாக இதுவரை இரு தரப்பிலும் அல்லது 3-வது நபர் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று கூறுவதால், இது தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பும் ரத்து செய்யப்படுகிறது.ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் மனைவி, எதிர்காலத்தில் தனது பதவியையும், அதிகாரத்தையும் அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது.மேலும் ஐ.பி.எஸ். அதிகாரி தனது கணவர் மற்றும் மாமனாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.