எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான திமுக மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.;

Update:2025-11-11 06:46 IST

புதுடெல்லி,

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணியை ரத்து செய்யக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தன்னிச்சையானது. குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் வக்கீல் பி.சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வக்கீல் பி.ஸ்ரீராம், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா சார்பில் வக்கீல் தேவ்யானி குப்தா, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா சார்பில் வக்கீல் ராதா ஷ்யாம் ஜனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் வக்கீல் பிரசன்னா ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

மா.கம்யூனிஸ்டு சார்பிலான ரிட் மனுவை வக்கீல் பரஸ் நாத் சிங் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு , நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை எதிர்த்த மனுக்களுடன், தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களையும் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்கிறது. இதுபோல், பிற மாநிலங்களில் திருத்தப்பணிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களும் அதே அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்