காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை; சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது

ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு மோசடி செயலை அரங்கேற்றியதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update:2025-08-23 14:59 IST

காந்திநகர்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சிலர் நிதி திரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, காசா மக்களுக்கு நிதி திரட்டுகிறோம் என்ற பெயரில் சிரியாவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த அலி மெகாத் அல்-அசார் என்ற நபரை அகமதாபாத் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் சிரியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். அவருடன் இந்தியாவிற்கு வந்த மேலும் 3 பேர் தப்பியோடிய நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு இத்தகைய மோசடி செயலை அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதற்கான நோக்கத்தை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்