தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்க வேண்டும் - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
நாட்டிற்கு இளம் தலைமை தேவை என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி புதிதாக கட்டப்பட்ட விடுதிகளைத் திறந்து வைத்து, பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-
21 வயதில் இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகி, மாவட்ட அதிகாரிகளாக நிர்வாகத்தில் ஈடுபடுகிறார்கள். 21 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் அரசியலமைப்பை அம்பேத்கர் நமக்கு வழங்கினார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்களிப்பதற்கான வயது 21-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகும்போது, 21 வயதில் சட்டமன்றத்திற்கு ஏன் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது? இந்த நாட்டிற்கு இளம் தலைமை தேவை. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வயது இன்னும் 25 ஆகவே உள்ளது. தெலுங்கானாவின் 65 சதவீத மக்கள் 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள், இது தேசத்திற்கு ஒரு சொத்து.
தெலுங்கானாவில் கஜானா வறண்டு போய் உள்ளது. விற்கவும் நிதி திரட்டவும் அரசிடம் நிலம் இல்லை. இருப்பினும் தரமான கல்வியை வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.