கொடூரத்தின் உச்சம்... மனைவியின் சகோதரியை 2-வது மனைவியாக்கும் முயற்சியில் பறிபோன 2 உயிர்கள்
திருமணத்திற்கு துணி எடுக்க வந்தபோது, அவர்களிடம் இது தொடர்பாக சந்தீப் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.;
சூரத்,
குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட். இவருடைய மனைவி வர்ஷா. வர்ஷாவின் சகோதரர் நிஸ்சய் காஷ்யப். சகோதரி மம்தா காஷ்யப். நிஸ்சய் காஷ்யப்புக்கு டிசம்பரில் திருமணம் நடைபெற முடிவாகி இருந்தது.
இதற்காக பிரயாக்ராஜ் நகரில் இருந்து நிஸ்சய், சகோதரி மம்தா மற்றும் அவர்களுடைய தாயார் சகுந்தலா தேவி ஆகியோர் சூரத் நகருக்கு துணி எடுக்க வந்துள்ளனர். ஆனால், மம்தாவை 2-வது மனைவியாக்கி கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் சந்தீப் இருந்துள்ளார். இதனை பலமுறை கூறி வந்திருக்கிறார்.
ஆனால், இதற்கு நிஸ்சய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருமணத்திற்கு துணி எடுக்க வந்தபோது, அவர்களிடம் இது தொடர்பாக சந்தீப் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதில் திடீரென கத்தியை எடுத்து, தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
சகுந்தலா தேவி காயமடைந்து இருக்கிறார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிவு செய்த உத்னா காவல் நிலைய போலீசார் சந்தீப்பை கைது செய்தனர். சந்தீப் கவுடும், அவருடைய சகோதரர் ராகுல் கவுடும் முறையே சகோதரிகளான வர்ஷா மற்றும் லட்டுவை திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.