தேன் நிலவில் தொழில் அதிபரை தீர்த்து கட்டிய மனைவி; போலீசிடம் நடித்து காட்டினார்

கணவரை 3 பேரும் தாக்க தொடங்கியதும், மனைவி சோனம் அவரை விட்டு விட்டு, மெதுவாக நடந்து சென்று விட்டார்.;

Update:2025-06-17 20:34 IST

கவுகாத்தி,

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ராஜா தொழிலதிபர் ஆவார். மனைவியின் தந்தையும் தொழிலதிபராக உள்ளார். திருமணத்திற்கு பின்னர், அவர்கள் தேன் நிலவுக்காக சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர்.

ஆனால், கடந்த மே 23-ந்தேதிக்கு பின்னர் இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய குடும்பத்தினர் இதுபற்றி மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். இந்த தம்பதி கடைசியாக தங்கியிருந்த பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கடந்த 2-ந்தேதி ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், மனைவியை காணவில்லை. வழக்கில், இது சந்தேகம் ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், கணவரை கூட இருந்து மனைவியே தீர்த்து கட்டுவதற்கான சதி திட்டத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

சோனம், அவருடைய காதலர் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்யும் திட்டம் தீட்டியுள்ளார். பல முறை இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் தேன் நிலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்காக ஆகாஷ், விஷால் மற்றும் ஆனந்த் ஆகிய 3 பேரை கூலிப்படையாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் 3 பேரில் ஒருவர், குஸ்வாஹாவுக்கு உறவினர் ஆவார். கொலை சம்பவத்தில் பயன்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. கொலையுடன் தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில் சோனம், கொலை எப்படி நடந்தது? என போலீசிடம் இன்று நடித்து காட்டினார். அவருடன் கூலிப்படையினரும் சென்றனர். எனினும், குஸ்வாஹா அழைத்து செல்லப்படவில்லை. இதன்படி, கிழக்கு காசி மலை பகுதியில் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாடங் நீர் வீழ்ச்சிக்கு அவர்கள் 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் போலீசிடம் சம்பவம் பற்றி நடித்து காட்டினர். விஷால் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஆனந்த் மற்றும் ஆகாஷ் அடுத்தடுத்து தாக்கியுள்ளனர். அதனை அவர்கள் நடித்து காட்டினர்.

இதேபோன்று ஆயுத பயன்பாடு பற்றியும் நடித்து காட்டப்பட்டது. இவர்கள் 3 பேரும் தாக்க தொடங்கியதும், மனைவி சோனம் கணவரை விட்டு விட்டு, மெதுவாக நடந்து சென்று விட்டார்.

அவர்கள் 3 பேரையும் குஷ்வாஹா தடுக்க முயன்றுள்ளார். அவர்களுடன் போராடியுள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் சோனம் இருந்துள்ளார். கணவரின் மொபைல் போனை அவரே முதலில் உடைத்துள்ளார். அவருடன் விஷாலும் சேர்ந்து கொண்டார். பின்னர் சோனம் தலைமறைவாகி விட்டார். போலீசாரிடம், தன்னுடைய கணவரை கொலை செய்து விட்டு, நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர் என்றே முதலில் சோனம் கூறியுள்ளார்.

எனினும், போலீசாரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நடித்து காட்டும் விசயம், வழக்கை வலுப்படுத்த உதவும் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்