தேனி; இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் விடுதலை- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய சுருளிமலை இரட்டைக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட திவாகரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;

Update:2025-07-16 06:38 IST

புதுடெல்லி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த காதலர்களான எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தேனி மாவட்டம், கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்ட திவாகருக்கு, தூக்குத் தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.இதற்கிடையே தீர்ப்பை எதிர்த்து திவாகர் சார்பில் வக்கீல் ஏ.கார்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.

திவாகர் சார்பில் மூத்த வக்கீல் வி.மோகனா, வக்கீல்கள் மானஸா ராமகிருஷ்ணா, கே.ஸ்ரீபிரியா, திரிஷாசந்திரன், மங்கேஷ் நாயக் ஆகியோர் ஆஜராகி காவல்துறையின் புலன்விசாரணையில் இருந்த குறைபாடுகளையும், டி.என்.ஏ. மாதிரி சேகரிப்பில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி வாதிட்டனர்.தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியத்துடன், கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் ஐகோர்ட்டு ஆராய்ந்து தீர்ப்பை உறுதிசெய்துள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்துசெய்து நேற்று தீர்ப்பு கூறியது. மேலும் அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லாவிட்டால் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.மேலும் என்.டி.ஏ. மாதிரி தொடர்பான சில வழிகாட்டு நெறிமுறைகளையும் சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்