கும்பமேளாவுக்கு சென்ற மக்களை மத்திய அரசு காப்பாற்றவில்லை: கனிமொழி எம்.பி.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.;

Update:2025-02-03 16:26 IST

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. ஜனாதிபதி உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க முடியவில்லை; அதில் ஏராளமான இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை; மிரட்டப்படுகின்றனர்; பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன; அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் 'Anti Indian'என்கிறார்கள்.

இந்தியாவின் இரும்புக் காலம் 5,345 வருடங்களுக்கு முன் தொடங்கியதை எங்களின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகிற்கு அறிவித்திருக்கிறார்கள். இது முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆய்வில் வெளிப்பட்டிருக்கும் உண்மை. எனினும் மத்திய அரசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த உண்மையை புறக்கணிப்பதால் நீங்கள் எங்களை புறக்கணிக்கவில்லை.

திராவிட நாகரிகத்தின் பெரும் பாரம்பரியத்திலிருந்து உங்களைதான் புறக்கணித்துக் கொள்கிறீர்கள். இரும்புப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவு குறித்து மத்திய அரசு இதுவரை மவுனம் காப்பது ஏன்?. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.3,000 கோடியில் சிலை வைப்பது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது; பட்டேலின் வார்த்தையை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மத்திய அரசும், மாநில அரசும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர். ஆனால், அவர்களை யாரும் காப்பாற்றவில்லை. மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாகின்றனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது கூட தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்