பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்களே பொறுப்பு: ஏர் மார்ஷல் பாரதி
இந்திய ஆயுத படைகளின் போரானது, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நெட்வொர்க் அமைப்புகளுக்கு எதிரானது என ஏர் மார்ஷல் பாரதி கூறினார்.;
புதுடெல்லி,
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாக, பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன.
இந்திய ஆயுத படைகள் கடந்த 6-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறி வைத்து தாக்கியது. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தமும் ஏற்பட்டது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது பற்றியும், பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது பற்றியும் ஏர் மார்ஷல் பாரதி இன்று பேட்டியளித்து உள்ளார். அதில் அவர், இந்திய ஆயுத படைகளின் போரானது, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நெட்வொர்க் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. அது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானது அல்ல என்றார்.
பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தி ஆலை மீது நடந்த தாக்குதலில், அது சேதமடைந்த வீடியோ ஒன்றை ஆயுத படைகள் வெளியிட்டன. இதுபற்றி குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கவும், தாக்குதலில் தலையிடவும் பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்தது. இதனால், அதற்கு நாங்கள் பதிலடி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு, அவர்களே முழு பொறுப்பு என கூறினார்.