உ.பி.யில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது;
லக்னோ,
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில், உத்தரபிரதேசத்தில் 2.89 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தமுள்ள 15.44 கோடி வாக்காளர்களில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களில் 18 சதவீதம் ஆகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட 2.89 கோடி பேரில் 46.23 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 2.17 கோடி பேர் இடம்பெயர்ந்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும், 25.47 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்க படிவம் 6,7ஐ பூர்த்தில் செய்து ஆன்லைனிலோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ பூர்த்தி செலுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.