வரதட்சணை புகார் தெரிவிக்க காவல் நிலையம் வந்த மனைவி... அடுத்து நடந்த சம்பவம் - தம்பதி மீது வழக்குப்பதிவு

காவல் நிலையத்தில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.;

Update:2025-09-21 18:59 IST

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மணீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மணீஷ் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணீஷ் மீது வரதட்சணை புகார் அளிப்பதற்காக பூஜா தனது பெற்றோருடன் செக்டார் 51 காவல் நிலையத்திற்கு சென்றார். இது குறித்து தகவலறிந்து மணீஷ் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த போலீசாரால் கூட அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக போலீசார் சண்டையை தடுத்து நிறுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் பூஜா மற்றும் மணீஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கோடு வரதட்சணை புகார் தொடர்பான வழக்கையும் இணைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்