நடனம் கற்றுக் கொடுப்பதாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

சிறுமியின் வீட்டின் அருகேயே, அவளை விட்டுவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.;

Update:2025-05-30 16:07 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். 18 வயதுக்கு உட்பட்ட அந்த சிறுமி கடந்த 24-ந் தேதி வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும் சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறி சிறுமியை தனது காரில் அவர் அழைத்து சென்றுள்ளார். காருக்குள் வைத்து அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, சிறுமியின் வீட்டின் அருகேயே, அவளை விட்டுவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுபற்றி தனது பெற்றோரிடம் சிறுமி கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காடுகோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காடுகோடியை சேர்ந்த பாரதி கண்ணன் (வயது 28) என்பதும், அவர் நடன பயிற்சியாளராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாரதி கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்