ஏற்காடு மலைப்பாதையில் ஹெல்மெட் அணிந்து சென்றால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு அனுமதி

ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஒருவழி பாதையாக அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது.

Update: 2024-05-24 03:23 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா-மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணமாக உள்ளனர்.

ஏற்காட்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட கார்கள், வேன்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் ஏற்காட்டில் கூட்டம் அலைமோதுகிறது. வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்போது சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஒருவழி பாதையாக அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சிக்கு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை அடிவாரம் சோதனைச்சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதுதவிர, மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏற்காடு செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, மொபட், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதையில் வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, வாகன ஓட்டிகளின் நலன் கருதியே மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏற்காடு செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளோம். மேலும், லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

கார்கள் மற்றும் வேன்களில் செல்வோர் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. எனவே, ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி சிறப்பாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்