13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-04-15 06:00 IST

கோவை,

கோவை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தங்களது 13 வயது மகளுடன், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்து உள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் வீட்டின் அருகில் வசித்து வந்த மில் தொழிலாளி ராபர்ட் கிளைவ் (வயது 47) என்பவரையும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராபர்ட் கிளைவ் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்ததும், அவருடன் சிறுமி இருப்பதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக ராபர்ட் கிளைவை பிடித்து விசாரித்தனர். இதில் திருமணமாகாத அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று உள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராபர்ட் கிளைவை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளாள். மேலும் சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்