பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் எட்டையபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் தலைமையில் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தின் முன்பு 100 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி தொங்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாகவி வேடமணிந்திருந்த பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து பாஜகவினர் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய பாடலுக்கு புகழ் சேர்த்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், பாஜக தான் அதிமுகவை ஒன்றிணைக்கச் சொன்னது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, செங்கோட்டையன் சொல்வதற்கெல்லாம் பாஜக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் உள்விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
திமுக S.I.R-ஐ எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, ரொம்ப தீவிரமாக திமுக இதை எதிர்ப்பதை பார்த்தால் நிறைய போலி வாக்காளர்களை திமுக காரங்க சேர்த்து வச்சிருக்காங்களோ? என்ற சந்தேகம்தான் வருகிறது. மேலும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தை, அபத்தத்தின் உச்சகட்டம் என விமர்சித்ததோடு அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமைந்ததற்கு தேசம் வெட்கப்படுகிறது என கூறினார்.