காசாவில் விடிய விடிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 20 பேர் பலி
காசா பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வாடிகன் தூதர் வந்திருக்கும் சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டில் பயணிகள் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், 38 பேர் பலியாகினர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென அதன் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த பஸ்சில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்த நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 5 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமேன் என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து, செங்கடலின் மேலே பறந்து சென்ற எப்/ஏ-18 ரக போர் விமானத்தின் மீது, இந்த கப்பல் குழுவுடன் இணைந்த மற்றொரு கப்பலான யு.எஸ்.எஸ். கெட்டிஸ்பர்க் கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க போர் விமானம் பறந்தபோது அதனை தவறுதலாக, அமெரிக்க கப்பலில் இருந்தவர்கள் சுட்டுள்ளனர். எனினும், நட்பு ரீதியாக சுடப்பட்ட விவகாரம் என இதனை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.