4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மேம்பாட்டு பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தையே வந்தடையும்.
அந்த வகையில், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நாளை முதல் 4-ந் தேதி வரை தாம்பரம் ரெயில் நிலையம் வரையே இயக்கப்படும்.
அதேபோல், சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேசுவரம் சேது எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - ராமேசுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் டிசம்பர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்தே புறப்படும்.
மேலும், சென்னை எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் டிசம்பர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.