ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
சென்னையை அடுத்த ஆவடி அருகே தண்டுரை விவசாயி தெருவில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் இன்று வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது.
இந்த வெடிவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் யாசின், சுனில் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.