தூத்துக்குடியில் ஒரே நாளில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ‘DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர் பண்டிகை நாட்களை முன்னிட்டு போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அதில் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரையும், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் என அன்று ஒரே நாளில் மொத்தம் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி மற்றும் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ‘DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை பெயர் குறிப்பிடாமல் (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.