நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எலிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.