சென்னை: லாரி சக்கரத்தில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்த சோகம்

அப்பகுதியினர், குப்பை லாரி ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update:2025-11-07 16:34 IST

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 8 வயது சிறுமியான காவியா, இன்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால், ஆசிரியர்கள் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை அவரது உறவினர் ஒருவர் பள்ளியில் இருந்து ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.

அவர் ஸ்கூட்டியின் முன்புறம் சிலிண்டரையும், பின்புறத்தில் சிறுமியை அமர வைத்துக்கொண்டும் சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி சிலிண்டர் ஒருபுறம் விழுந்த நிலையில், சிறுமியும் மறுபுறம் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி, சிறுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதியினர், குப்பை லாரி ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்