ஆடு மேய்ப்பவரை தாக்கிய கரடி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

காயமடைந்தவருக்கு சுமார் 112 தையல்கள் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.;

Update:2025-07-28 18:44 IST

கள்ளக்குறிச்சி ,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ராஜமாணிக்கம் (வயது 55) என்பவரை கரடி ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், இவர் வழக்கம் போல தனது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் இருந்து திடீரென வெளிவந்த ஒரு கரடி, அவரை தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கரடியை விரட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த ராஜமாணிக்கம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்திலும் உடலிலும் கரடி நகங்களால் ஏற்பட்ட ஆழமான காயங்கள் இருந்தன. இதனால் அவருக்கு சுமார் 112 தையல்கள் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கல்வராயன் மலைப் பகுதியில் வாழும்  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்