ரூ.22 ஆயிரம் பணம் வாங்கி விட்டு திருப்பி தராததால் ஆத்திரம்: நண்பர்களுக்கு இடையே பாரில் நடந்த தகராறு.. அடுத்து நடந்த அதிர்ச்சி

மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update:2025-09-23 08:33 IST

நித்தியராஜ், சரவணன்


புதுக்கோட்டை மாநகரில் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது 40). இவரது தந்தை லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். அதனை இவர் கவனித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நித்தியராஜ், சரவணன் ஆகிய 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். சரவணனிடம், நித்தியராஜ் ரூ.22 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். அதன்பின் அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள எப்.எல்.2-ரக மதுபாரில் குளிர்சாதன அறையில் நித்தியராஜ், சரவணன் ஆகியோர் நேற்று மதியம் மது அருந்தி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தியராஜின் மார்பு பகுதியில் பயங்கரமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நித்தியராஜை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் நண்பர் நித்தியராஜை கொலை செய்த மருந்தக ஊழியரை சரவணனை போலீசார் கைது செய்து டவுன் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்