போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலரை அலறவிட்ட சிறுத்தை! - அதிர்ச்சி வீடியோ
போலீஸ் நிலையத்திற்கு சிறுத்தை வந்து சென்ற விவரம் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பஜாருக்குள் நேற்றிரவு 8.30 மணிக்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. இரவு நேரம் என்பதால் புதர்களுக்குள் பதுங்கியவாறு வந்த சிறுத்தை பஜாரில் இருந்த போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது நுழைவு வாயில் அறைக்குள் நுழைந்த சிறுத்தை இன்ஸ்பெக்டர் அமர்ந்து இருக்கும் அறையை சுற்றி பார்த்தது.
இந்த சமயத்தில் மற்றொரு அறைக்குள் போலீஸ் ஏட்டு ஒருவர் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை புலி அறைக்குள் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அச்சத்தில் உறைந்து போய் சத்தம் போட முடியாத நிலையில் இருந்தார்.
பின்னர் அறைக்குள் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை என உணர்ந்த சிறுத்தை புலி வந்த வழியாக வாசற்படிக்கட்டுகளில் இறங்கி வெளியே சென்றது. இதை அறையில் கதவு வழியாக எட்டிப் பார்த்த போலீஸ் ஏட்டு சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்தவுடன் மெதுவாக வந்து நுழைவாயில் கதவை பூட்டினார். அதன் பின்னரே அவர் நிம்மதி அடைந்தார்.
தொடர்ந்து சிறுத்தை போலீஸ் நிலையத்துக்குள் வந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் நடுவட்டம் வனத்துறையினரும் அப்பகுதிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதேபோல் போலீஸ் நிலையத்திற்கு சிறுத்தை வந்து சென்ற விவரம் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். தொடர்ந்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.