சென்னை போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம் - மீனவர் அதிர்ச்சி
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் என தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது போரூர் ஏரி. இது ரெட்டேரி என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் 1995 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரியில் குளிப்பது, துணி துவைப்பது, நீச்சல் அடிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 250 ஏக்கர் ஆகும். இங்கு 4 வடிப்பான்களை கொண்டு 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், போரூர் ஏரியில் மீன் பிடிக்க மீனவர்கள் விசை படகுகளில் சென்று பிடிப்பது வழக்கம், அப்போது மீன் பிடிக்கும்போது மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போரூர் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீனவர்கள் மூலமாக உடலை கரைக்கு கொண்டு வந்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் என தகவல் வெளியாகி உள்ளது. இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போரூர் ஏரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.