திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் எதிரான இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.;
சென்னை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார்.
ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை.தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினர்.
அந்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கூறி உள்ளனர்.இதன்மூலம் தனி நீதிபதியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -ஆதாரங்கள் இன்றி நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு போல உள்ளது. இந்த தீர்ப்பு நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மையை தகர்க்கிறது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் எதிரான இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மதவெறி அமைப்புகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார்.