வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை பறிப்பு

பீரோவை திறந்து பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.;

Update:2025-10-10 01:53 IST

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஏ.எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 29), இவரது கணவர் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். கவிதா தன்னுடைய 2 மகள்கள் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். நேற்று காலையில் 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட்டனர். தங்கை ஊருக்கு சென்று விட்டார். கவிதா கூடுவாஞ்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டுமொபட்டை ஸ்டார்ட் செய்தார். அப்போது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் கவிதாவை கத்திமுனையில் மிரட்டி பூட்டிய வீட்டை திறக்கும் படி கூறினார்.

பயந்து போன கவிதா வீட்டை திறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் கவிதாவின் கழுத்தில் கத்தியை வைத்தபடி பீரோவை திறந்து பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து கவிதா கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்