காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
கடந்த சில நாட்களாக சுஜின் யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார்.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சஜின் (32 வயது). இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்சூரன்ஸ் பிரிவு அதிகாரியாக கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் படித்த செல்வராஜ் என்பவருடன் ஆதம்பாக்கம் அம்மன் தெருவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார்.
கடந்த சில நாட்களாக சுஜின் யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் வேலைக்கு சென்றிருந்த நிலையில் சஜின் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். செல்வராஜ் உள்ளிட்ட நண்பர்கள் வேலைக்கு சென்றுவிட்டு இரவு திரும்பியபோது அறையின் கதவு பூட்டி கிடந்தது. பலமுறை தட்டியும் சஜின் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சமையல் அறையில் சஜின் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் தற்கொலை செய்துகொண்ட சஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சென்னையில் உள்ள அவரது சகோதரிக்கு தகவல் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர், அதில் காதல் தோல்வி காரணமாக சஜின் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.