ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஜாமீன் ரத்து மீதான விசாரணை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு
சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.;
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத் தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில்,இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டு நீதிபதி கே. ராஜசேகர் விசாரணைக்கு முன்பு வந்தது.
அப்போது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டபட்டது. காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு. ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும். எனக்கூறிய நீதிபதி விசாரணையை டிசம்பர் 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.